முழு Unicode வாசிப்புப் பதிப்பு

மலைபடுகடாம்

Malaipaṭukaṭām · A mountain guide poem rich in landscape and performance.

பதிப்புக் குறிப்பு: Project Madurai வெளியிட்ட Unicode மின்பதிப்பிலிருந்து வாசிப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. மூலத்தில் துணுக்குகள் அல்லது சுருக்கப் பதிப்பு மட்டுமே உள்ள இடங்களில் அந்த நிலை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. உரை மாற்றப்படவில்லை.
Source and attribution: Project Madurai Unicode edition. Project Madurai’s edition header is preserved below.
Project Madurai edition header
malaipaTukaTAm of perungkaucikanAr (in tamil script, unicode format)
malaipaTukaTAm of perungkaucikanAr
(one of pattuppATTu works)
in Tamil script, unicode/utf-8 format
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான
"மலைபடுகடாம்"
ஆசிரியர்: இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation : Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India
Dr. C. Kesavaraj, BDS, FICD, Trustee, K.A.P. Viswanatham Higher Secondary School (Project Sponsor)
Dr. R. Vasudevan
, Former Director, School of Energy, Bharathidasan University, Trichi, Tamilnadu (Tech. support)
Dr. R. Rajendran, Senior Teacher, K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu (coordination)
Text Input : Ms. J. Jayanthi (Librarian); S. Sinnakannan (Typist), Sivadayal, Christopher (Students),
K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu, India
Proof-reading: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
This page was first put up on the Net on June 22, 2000
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் பத்தாவதான மலைபடுகடாம் மலைபடுகடாம் பாடியவர் :: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பாடப்பட்டவன் :: நன்னன் வேண்மான் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 583 ----------------------- திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி 10 நொடிதரு பாணிய பதலையும் பிறவும் கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர் கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர் இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும் அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித் 20 தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின் கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக் குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலை தீர உரீஇ வரகின் குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச் சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப் புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப் புதுவது போர்த்த பொன்போற் பச்சை வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் 30 மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின் வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ் அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத் துறைபல முற்றிய பைதீர் பாணரொடு 40 உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின் மதந்தபு ஞமலி நாவி நன்ன துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக் கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக் கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல் புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக் கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ 50 தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு யாமவ ணின்றும் வருதும் நீயிரும் கனிபொழி கானம் கிளையொ டுணீஇய துனைபறை நிவக்கும் புள்ளின மானப் புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோ ள் மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின் இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் 60 புதுநிறை வந்த புனலஞ் சாயல் மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின் ஆற்றின் அளவும் அசையுநற் புலமும் வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும் மலையும் சோலையும் மாபுகல் கானமும் தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப் 70 பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும் நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் 80 நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் பேரிசை நவிர மேஎ யுறையும் காரிஉண்டிக் கட வுள தியற்கையும் பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும் இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம்படக் கடந்து நூழி லாட்டிப் புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும் இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொடு 90 திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின் வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும் கேளினி வேளைநீ முன்னிய திசையே மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் புதுவது வந்தன் றிதுவதன் பண்பே வானமின்னு வசிவு பொழிய ஆனாது இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப் பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து அகலிரு விசும்பி னாஅல் போல 100 வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை நீலத் தன்ன விதைப்புன மருங்கின் மகுளி பாயாது மலிதுளி தழாலின் அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற் கெளவை போகிய கருங்காய் பிடியேழ் நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண் பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக் கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல் விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும் குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை 110 மேதி யன்ன கல்பிறங்கு இயலின் வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக் காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக் குறையறை வாரா நிவப்பி னறையுற்று ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே புயற்புனிறு போகிய பூமலி புறவின் 120 அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை தொய்யாது வித்திய துளர்படு துடவை ஐயவி யமன்ற வெண்காற் செறுவின் மையென விரிந்தன நீணறு நெய்தல் செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் காயங் கொண்டன இஞ்சிமா விருந்து வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் 130 துறுகல் சுற்றிய சோலை வாழை இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக் கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற் காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் 140 குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக் கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக் கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே தீயி னன்ன ஒண்செங் காந்தள் தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து அறியா தெடுத்த புன்புறச் சேவல் ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் 150 மணஇல் கமழு மாமலைச் சாரல் தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர் சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப் பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத் தூவொடு மலிந்த காய கானவர் செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக் கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி 160 அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச் சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரிய மெனினே நும்மில் போல நில்லாது புக்குக் கிழவிர் போலக் கேளாது கெழீஇச் சேட்புலம் பகல இனிய கூறிப் பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர் ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு 170 வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ் வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் இன்புளிக் கலந்து மாமோ ராகக் கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து 180 வழையமை சாரல் கமழத் துழைஇ நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக் குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி அகமலி உவகை ஆர்வமொ டளைஇ மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் அனைய தன்றவன் மலைமிசை நாடே நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும் வரையர மகளிர் இருக்கை காணினும் 190 உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர் பலநா ணில்லாது நிலநாடு படர்மின் விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப் புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர் அரும்பொறி உடைய வாறே நள்ளிருள் அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின் நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில் கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் 200 செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின் புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர் உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப் பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல் இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக் கருவிர லூகம் பார்ப்போ டிரிய உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் 210 உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின் குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர் அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப் பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித் துருவி னன்ன புன்றலை மகாரோடு ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின் அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல் விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா 220 வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினைநவில் யானைச் சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி ஓரியாற் றியவின் மூத்த புரிசைப் பராவரு மரபிற் கடவுட் காணிற் 230 தொழாஅநிர் கழியின் அல்லது வறிது நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி மாரி தலையுமவன் மல்லல் வெற்பே அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும் நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும் ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று 240 நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர் வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே கழுதிற் சேணோன் ஏவொடு போகி இழுதி னன்ன வானிணஞ் செருக்கி நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின் நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின் இருள்துணிந் தன்ன ஏனங் காணின் முளிகழை இழைந்த காடுபடு தீயின் நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் 250 குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர் புட்கை போகிய புன்றலை மகாரோடு அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும் இல்புக் கன்ன கல்லளை வதிமின் அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின் கயம்கண் டன்ன அகன்பை யங்கண் மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும் 260 துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி இகந்துசேட் கமழும் பூவும் உண்டோ ர் மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார் இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் இடனும் வலனும் நினையினர் நோக்கிக் குறியறிக் தவையவை குறுகாது கழிமின் கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக் கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின் நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் 270 மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின் ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத் தேஎ மருளும் அமைய மாயினும் இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும் குறவரு மருளுங் குன்றத்துப் படினே அகன்கட் பாறை துவன்றிக் கல்லென இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின் பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக் காடுகாத் துறையுங் கானவர் உளரே நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் 280 புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி உண்டற் கினிய பழனுங் கண்டோ ர் மலைதற் கினிய பூவுங் காட்டி ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற நும்மி னெஞ்சத் தவலம் வீட இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர் அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் 290 பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும் அருவிய நுகரும் வானர மகளிர் வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல் சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் 300 எய்தெற இழுக்கிய கானவர் அழுகை கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை மலைமா ரிடூஉம் ஏமப் பூசல் கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின் ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் 310 கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச் சிறுமை யுற்ற களையாப் பூசல் கலைகை யற்ற காண்பின் நெடுவரை நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப் பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை அருங்குறும் பெறிந்த கானவர் உவகை திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு ... 320 மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென வான்றோய் மீமிசை அயருங் குரவை நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாக ரோதை ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும் கிளிகடி மகளிர் விளிபடு பூசல் இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 330 மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார் கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் 340 கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும் தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும் என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன் அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக் குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர் முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் 350 விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங் உண்டற் கினிய பலபா ராட்டியும் இன்னும் வருவ தாக நமக்கெனத் தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன் உருமுரறு கருவிய பெருமலை பிற்பட இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக் கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் 360 மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக் கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி தூஉ யன்ன துவலை தூற்றலின் தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற் கூவல் அன்ன விடரகம் புகுமின் இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து நின்று நோக்கினும் கண்வாள் வெளவும் மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு 370 தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக் கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின் உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு புரைதவ உயரிய மழைமருள் பஃறோல் அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும் முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல் 380 இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக் கைபிணி விடாஅது பைபயக் கழிமின் களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல் தளிபொழி கானந் தலைதவப் பலவே ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத் 390 தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின் பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர் சந்து நீவிப் புன்முடிந் திடுமின் செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து கடவு ளோங்கிய காடேசு கவலை ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே 400 மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர் ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின் புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக் கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின் வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் 410 பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர் பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித் தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் 420 கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் கூவை காணிற் படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக் கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும் உம்பல் அகைத்த ஒண்முறி யாவும் தளிரொடு மிடைந்த காமரு கண்ணி 430 திரங்குமர னாரிற் பொலியச் சூடி முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின் செவ்வீ வேங்கைப் பூவி னன்ன வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ் அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி 440 வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் விசையங் கொழித்த பூழி யன்ன உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப் புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின் புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் 450 பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும் பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும் நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே கண்புமலி பழனங் கமழத் துழைஇ வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற் பிடிக்கை யன்ன செங்கண் வராஅல் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த 460 விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக் கண்டோ ர் மருளக் கடும்புடன் அருந்தி எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழிமின் 470 வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல் கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும் துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும் காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின் நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற் பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து 480 யாறெனக் கிடந்த செருவிற் சாறென இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற் கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு மலையென மழையென மாட மோங்கித் துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும் பனிவார் காவிற் பல்வண் டிமிரும் நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப் பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர் கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் 490 அருங்கடி வாயில் அயிராது புகுமின் மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர் வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி வந்தோர் மன்ற அளியர் தாமெனக் கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப் பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத் தொழுதி போக வலிந்தகப் பட்ட மடநடை ஆமான் கயமுனிக் குழவி 500 ஊமை எண்கின் குடாவடிக் குருளை மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர் அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற் பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை கானக் கோழிக் கவர்குரற் சேவல் 510 கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம் இடிக்கலப் பன்ன நறுவடி மாவின் வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி காஅய்க் கொண்ட நுகமரு ணூறை பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி குரூஉப்புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள் நாகந் திலக நறுங்காழ் ஆரம் 520 கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி திருந்தமை விளைந்த தேக்கள் தேறல் கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர் நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல் உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும் குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி வானத் தன்ன வளமலி யானைத் 530 தாதெருத் ததைந்த முற்ற முன்னி மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக் கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் கடவ தறிந்த இன்குரல் விறலியர் தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக் குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல் 540 இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக் கொடைக்கட னிறுத்த செம்ம லோயென வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச் சென்றது நொடியவும் விடாஅன் நசைதர வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப் பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து 550 அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து இலமென மலர்ந்த கைய ராகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக் கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மணலினும் பலரே அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப் பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி 560 இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள் தலைவன் தாமரை மலைய விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய 570 நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர் வாரிக் கொள்ளா வரைமருள் வேழம் கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும் இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக் கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின் வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக் கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென மழைசுரந் தன்ன ஈகை நல்கித் 580 தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர் வென்றெழு கொடியிற் றோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே. 583 மலைபடுகடாம் முற்றிற்று. ---------------------------- This webpage was last revised on 7 August 2021. Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).